அவர் ஒரு பிரெஞ்சுக்காரர். பெயர் பெர்னார்டு பாலிசி. அவர் விஞ்ஞானி அல்ல. நிலம் அளக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு சாதாரணத் தொழிலாளி. அவரது குடும்பம் வறுமையில் வாடிக் கிடந்தது.
பாலிசி ஓய்வு நேரத்தில் கண்ணாடியில் சித்திரம் தீட்டும் தொழில் செய்து கொஞ்சம் பணம் ஈட்டி வந்தார்.
ஒருநாள் ஒரு வீட்டில் கண்ணாடியில் சித்திரம் தீட்டுவதற்காக பெர்னார்டு பாலிசி சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த ஓர் அழகான பீங்கான் பாத்திரம் அவர் மனதைக் கவர்ந்தது.
அந்தப் பீங்கானை ஆர்வத்துடனும், ஆவலுடனும் கையில் எடுத்துத் தடவிப் பார்த்தார்.
அந்தப் பீங்கான் பொருளை எவ்வாறு தயார் செய்திருப்பார்கள் என்று அறிய அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.
பீங்கான் பாத்திரங்கள் தயார் செய்வது குறித்து பாலிசிக்கு ஒன்றுமே தெரியாது. பீங்கான் தயாராவதை அவர் ஒரு தடவை கூட கண்களால் பார்த்தது கிடையாது.
அந்தக் காலத்தில் பீங்கான்கள் அதிக விலையுடையதாக இருந்தன. பணக்கார வீடுகளில்தான் பீங்கான் பொருட்களைக் காண முடியும். ஏழை மக்களால் பீங்கான்களைப் பற்றி யோசிக்கவே முடியாது.
பெர்னார்டு பாலிசிக்கு பீங்கான்கள் தயார் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழை மக்களும் வாங்கும் அளவுக்கு மலிவான ஆனால் தரமான பீங்கான் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
முதலில் அழகான மண்பாண்டங்களைத் தயார் செய்து அவற்றுக்கு மெருகு ஏற்றிப் பீங்கான் பாத்திரங்கள் போலத் தோன்றும்படி செய்தார்.
அவை விலை மலிவாக இருந்தாலும், அசல் பீங்கான் பாத்திரங்களாக இல்லாததால் பொதுமக்கள் அந்தப் பாத்திரங்களை அதிக அளவில் விரும்பி வாங்க முன்வரவில்லை.
மனம் தளராத பாலிசி, அசல் பீங்கான் பாத்திரங்களைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஆனால் தான் தயாரித்த பாத்திரங்களைச் சூளையில் இட்டு வேக வைப்பதற்கு விறகுகள் வாங்கக் கூட அவரிடம் பணம் இல்லை.
எனவே அவர் தன்னிடம் இருந்த பழைய மேஜை, நாற்காலிகளை உடைத்துச் சூளையில் போட்டார். அவையும் போதாததால் வீட்டுக் கூரையில் ஒரு பகுதியைப் பிரித்துச் சூளையில் போட்டார்.
ஏறத்தாழ பதினாறு ஆண்டு காலம் பசியுடனும், பட்டினியுடனும் அவதிப்பட்டு, பீங்கான் பாத்திரங்களை மலிவாகத் தயார் செய்வதற்கான நடைமுறைகளைப் பாலிசி கண்டுபிடித்துவிட்டார்.
அவர் தயார் செய்த பீங்கான்கள் ஐரோப்பாவில் தயாராகும் பீங்கான்களை விடத் தரமானவையாகவும், அழகானவையாகவும் காட்சியளித்தன. அதேசமயம் அவை விலை மலிவாகவும் இருந்தன.
பீங்கான் பாத்திரங்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்வதை முதலில் தொடங்கிவைத்தது பெர்னார்டு பாலிசிதான்.
பாலிசியின் திறமை, அவர் தயாரித்த பீங்கான் பாத்திரங்களின் சிறப்பு ஆகியவை பிரெஞ்சு அரச குடும்பத்தினரின் கவனத்துக்கு வந்தன. அரச குடும்பத்தினர் பாலிசி உருவாக்கிய பீங்கான் பாத்திரங்களைத் தருவித்துப் பார்த்து வியந்தனர்.
பின்னர் பெர்னார்டு பாலிசியை அரண்மனைக்கு அழைத்துக் கவுரவித்தனர். அவர் பீங்கான் தயாரிப்புத் தொழிலை பெருமளவிலும், நவீன முறையிலும் மேற்கொள்வதற்கு பிரெஞ்சு அரசாங்கம் தாராளமாகப் பண உதவி செய்தது.
நவீன பீங்கான் தயாரிப்புக்கு பெர்னார்டு பாலிசிதான் முன்னோடி என்று கூறலாம்
No comments:
Post a Comment
வணக்கம்