இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.
அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்: 1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும். 2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும் 3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும். இவை, ‘முட்டுக்கட்டைகள்’ என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக’ விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல’ பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்’ என்று பேசி வருகிறார்கள்.
இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி’ தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்’ என்று கேட்டால் “ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்’ என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.
இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு – அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும். இந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் – புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன’வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100க்கு 84 போராக உள்ள ‘இந்துக்களுக்கு’ உரிய சட்டமாகிய இந்து ‘லா’விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.
இந்து ‘லா’வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும். நாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன.
இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்’ புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும்? எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.
ஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
விடுதலை’ தலையங்கம் – 22.5.1959
No comments:
Post a Comment
வணக்கம்