பல்லாயிரக்கணக்கான விளக்குகள் ஜொலித்த வண்ணம் ஒரு பெரிய பொழுதுபோக்கு மால் அதனைப் பார்த்ததும் லெனின்,காரல் மார்க்ஸ் போன்றோரின் உழைப்பு கேள்விக்குறியாக என் மனதில் பட்டது.
வண்டி நிறுத்த 20ரூபாய்க் கட்டணம்,அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அங்கிருந்தால் கூடுதல் கட்டணமாக வண்டிக்கு 10ரூபாய் போன்றவைகள் வசூலிக்கப்பட்டதும் அங்கு பாப்கான் பாக்கெட் ரூபாய் 120க்கு விற்க்கப்பட்டதும் ,சமோசா 50ரூபாய்க்கு விற்கப்பட்டதும் பகல் கொள்ளைப் போல தோன்றினாலும் அதனை அனுபவிக்க ஒரு மக்கள் கூட்டம் உள்ளது.
மற்றொரு மக்கள் கூட்டம் இதனை நிரந்தர பொருட்காட்சியாக பார்த்துவிட்டு மட்டும் செல்வதும் ஒரு கூட்டம் கிளிக் கிளிக் என புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வேடிக்கையாக இருந்தது.நான் அங்கு சென்றபோது ஒருவர் கரண்ட் இல்லாவிட்டால் இந்த மாலுக்கு பெரிய சிக்கலாகி விடும் என்றார் அதற்கு நான் இங்கு இவ்வளவு கரண்ட் அநியாயமாக தேவையில்லாத குதுகலத்திற்காக செலவழிக்கப்படுவதால்தான் நாம் இன்று மின்சாரம் இல்லாமல் இருக்கிறோம் என்றேன்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தெருவில் வந்து கூவி கூவி ஒரு நாள் முழுவதும் பாப்கான் விற்றாலும் அவருக்கு 120 ரூபாய் கிடைத்த பாடில்லை.தெரு ஓரக்கடையில் 5 ரூபாய்க்கு சமோசா வாங்க மறுக்கிறோம்.
இந்த மாதிரி மால் எல்லாம் ஒரு மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களிலும்,நமது பாமர மக்கள் இருக்கும் இடங்களில் டாஸ்மார்க் கடையும் வைக்கபடுகிறது.
பணக்காரன் பணக்காரனாகிக் கொண்டே போகிறான் ஏழை ஏழையாகிக் கொண்டே போகிறான்.பணக்காரன் தரமான பொருட்களை அனுபவித்து கொண்டே இருக்கிறான்.ஏழை மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி தனது வாழ்வை தொலைக்கிறான்.
இந்த மாதிரி மால்களில் வர்ண பேதம் ஒழிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் ஒழிக்கப்படவில்லை ஏனென்றால் வர்க்கப் பேதம் ஒழிக்கப்படவில்லை பெரும்பாலானோர் வெறும் பொருட்காட்சியாக மட்டும் பார்த்து செல்லும் நிலை உள்ளது.
விழா என்றால் ஏதாவது ஒரு அனாதை இல்லம் அல்லது ஒரு முதியவர் இல்லத்திற்க்கு சென்று உதவி செய்யுங்கள்.நீங்கள் மாலுக்கு சென்று செலவழிக்கும் பணத்தால் உங்களுக்கு கிடைப்பது ஒரு நிமிடச்
அற்ப சந்தோசம் .ஆனால் ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று நீங்கள் உதவி செய்யும் போது ஒரு சின்னக் குழந்தையின் முகத்தில் தெரியும் சிரிப்பினால் நீங்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை .முதியவர் இல்லத்திற்கு சென்று உதவி செய்த திருப்தி உங்களுக்கு வேறு எப்போதும் கிடைக்காது .
நானும் பார்வையாளனாக சென்றேன். மற்றவர்கள் பொருளை பார்த்தனர்.நான் பொருளையும் பார்த்தேன்,இவர்கள் பொருள்களைப் பார்ப்பதை மட்டும் பார்த்தேன்.ஏன் இவர்கள் பார்க்க மட்டும் செய்கிறார்கள் ? என்ற கேள்வி எழுந்தது அதன் விளைவு இந்த பதிப்பு.
No comments:
Post a Comment
வணக்கம்